நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனியாக பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. எல்லை சோதனைச் சாவடிகளில் மருத்துவக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடிய ஆபத்தான தொற்றாக கருதப்படுவதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பதிவான நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
