கிராமிய வாழ்க்கையையும், இயற்கை சார்ந்த மனித உணர்வுகளையும் திரைப்படங்களில் உயிர்ப்புடன் காட்டிய அவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
1977ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை உருவாக்கினார். அதுவரை ஸ்டூடியோ மையமாக இருந்த திரைப்படங்களை கிராமப்புறங்களுக்கும் இயற்கை சூழல்களுக்கும் கொண்டு சென்ற பெருமை அவருக்கே சேரும். கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா உள்ளிட்ட பல வெற்றி படைப்புகள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
புதிய திறமைகளை கண்டறிந்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவராகவும் பாரதிராஜா அறியப்படுகிறார்.
பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அவரது படங்களின் மூலம் வளர்ந்தனர். அவரது படைப்புகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சமூக விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு சென்றன.
பாரதிராஜாவின் மறைவு செய்தி வெளியாகியதும்
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனித்துவமான அத்தியாயத்தை எழுதிய பாரதிராஜாவின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரது படைப்புகளும், அவர் உருவாக்கிய கலை மரபும் என்றும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து நிற்கும்.
